முதலமைச்சரை உச்சநீதிமன்றம் ஒழுங்குபடுத்த முடியுமா ?- நீதிபதிகள் கேள்வி
முதலமைச்சர் என்ன பேச வேண்டும் என்பதை உத்தரவு பிறப்பித்து ஒழுங்குபடுத்த முடியுமா? திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ன பேச வேண்டும்? எங்கு செல்ல வேண்டும்? என்பதை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஒழுங்குபடுத்த முடியுமா? என்று திமுக தொடர்ந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சாட்சிகளை கலைக்கும் வகையில் தவெக தலைவர்கள் பொதுவெளியில் பேசி வருவதாகக் கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், “தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தவெகவினர், கரூர் விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசவோ அல்லது அரசியல் எதிரிகள் மீது பழி சுமத்தவோ தடை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், சிபிஐ விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களே தற்போது தவெக ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பதால், அவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தவும், கலைக்கவும் வாய்ப்புள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, ஜூலை 10 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அரசு வேலைவாய்ப்பு மற்றும் நலத்தட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் வழக்கில் மிக முக்கிய சாட்சிகள் என்பதால், இந்த சந்திப்பு விசாரணையை பாதிக்கலாம் என திமுக தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜரானார். அவரிடம், "ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ன பேச வேண்டும்? எங்குச் செல்ல வேண்டும்? என்பதை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஒழுங்குபடுத்த முடியுமா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சார்பில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களோ அல்லது நிவாரணங்களோ வழங்குவது, சாட்சிகளை அச்சுறுத்துவதாகவோ அல்லது சிபிஐ விசாரணையை திசைதிருப்புவதாகவோ எப்படி அமையும்? என வினவினர்.
மேலும், உச்ச நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் திமுக தரப்பை எச்சரித்தனர். இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் எங்கும் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை, அவர் மீது முதற்கட்டத் தகவல் அறிக்கை கூட இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.





கருத்துக்கள்