புரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
ஒடிசா மாநிலம் புரியில் நடைபெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 2 பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம், புரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று நடைபெற்றது. இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் புரியின் பிரதான சாலையான கிராண்ட் சாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மதியம் 2 மணி அளவில், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், பல பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்த 2 பக்தர்களை, புரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே வர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவர்களின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இறந்தவர்களின் விவரம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 150க்கும் மேற்பட்டோர் புரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





கருத்துக்கள்