advertisement

திராவிடத்தை இந்துத்துவாவின் காலடியில்  வைத்துவிட்டார்? இபிஎஸ்-கிற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

ஜூன் 23, 2025 11:36 முற்பகல் |

 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் 'அண்ணா' பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்.

அண்ணாவைக் கேவலப்படுத்துவதை 'அண்ணா' என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள்.உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா?

'நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிட வா போனீர்கள்? 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள்.

அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? 'மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு' எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக!

விஜயதசமி விழாவிற்காக கன்னியாகுமரியில் 2024 அக்டோபர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை அதிமுகவின் தளவாய் சுந்தரம் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததற்காக, தளவாய் சுந்தரத்தைக் கட்சிப் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். அடுத்த மாதமே அவரை சேர்த்துக் கொண்டார். அப்படியான நாடகம் கூட RSS நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற எஸ்.பி.வேலுமணிக்கு நடக்கவில்லை. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க கையெழுத்து இயக்கம் நடத்திய போது அதில் கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பிறகு சேர்க்கப்பட்டார். இப்படியான பாஜக பாசக் காட்சிகள் முருகன் மாநாட்டிலும் அரங்கேறியிருக்கின்றன.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, 'சூரனை வதம் செய்த முருகா! திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா!' என்றும் 'திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தர்களே' என்றும் இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு 'திராவிட' என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்குத் திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.

முருகன் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆந்திரத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை எல்லாம் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். வெறுப்பு பேச்சுகளை எல்லாம் அதிமுக ஏற்றுக் கொள்கிறது போல! "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது.

தமிழ்நாட்டு மக்களிடம் பன்னெடுங்காலமாக நிலவி வரும் சமய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் குலைக்க வேண்டும் எனும் சதி நோக்கத்தோடு பாஜகவும் இந்து முன்னணியும் நடத்திய முருகன் மாநாடு, பாஜக என்ற பாசிச எதிரிகளை மட்டுமல்ல, அடிமை அதிமுக துரோகிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

இந்தியாவிலேயே பாஜகவின் மதவெறி அரசியலுக்கு இடம் தராத ஒரே மண் தமிழ்நாடு. இங்கே எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் எனும் கலவர நோக்கத்தோடு, பல வித்தைகளை பாஜக காட்டினாலும் அவை படுதோல்வியையே சந்திக்கின்றன. அதற்குக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தலைமையேற்று நடத்தப்பட்ட திராவிட இயக்கம்தான். அந்த இலட்சியப் பணியைத் தலைமையேற்று நடத்தி பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிரான சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.

திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement