அஜித் குமார் மரணம்: விஜய் தலைமையில் நாளை மிகப்பெரிய போராட்டம்!
அஜித் குமார் மரணம் தொடர்பாக நாளை த.வெ.க.சார்பில் நடைபெறும் போராட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், சமீபத்தில் திருட்டு வழக்கின் விசாரணைக்குள் போலீசாரால் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பிலும் விழிப்புணர்வு மற்றும் நீதிக்கான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலில், சென்னை மாநகராட்சி மற்றும் போலீசாரிடம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சிவானந்தா சாலை அருகே உள்ள தூர்தர்ஷன் அலுவலகம் முன்பு, ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 10 மணி முதல் போராட்டம் நடைபெற, போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கழக தலைவர் விஜய் நேரடியாக கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இது தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கருத்துக்கள்