மக்கள் வரியை சூறையாடும் திமுக!- நயினார் நாகேந்திரன்
மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் காவலில், மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு குறைந்த மதிப்பை காண்பித்து சொத்துவரியில் மோசடி நடந்துள்ளதாக புகார் செய்திருந்தார்.அவ்வகையில், காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், மாநகராட்சியில் ரூ.150 கோடியில் வரி மோசடி நடந்திருப்பதாக அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்தன. இதில் மாநகராட்சி நிர்வாகத்தையும், தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் வரி மோசடி தொடர்பாக மதுரை மாநகராட்சியின் 5 மண்டல தலைவர்கள் மீதும் புகார் எழுந்தது. இதையடுத்து முதலமைச்சர் உடனடியாக மண்டல தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரிமோசடி தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து மதுரை புதூர் பகுதியில் இன்று பா.ஜ.க. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி தெரிவிக்கையில், 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
இன்றைக்கு முதலமைச்சரை பொருத்தமட்டில் எப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்ததோ அப்போது இருந்தே அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயம் வந்துவிட்டது. அமித்ஷா தமிழகத்திற்கு வருகிறார் என்றால் தி.மு.க.வினர் பீதியடைகின்றனர்.நாடு போற்றும் நல்லாட்சி என்று பெருமை பேசும் தி.மு.க. அரசு முறைகேடுகளைத் தடுக்கத் தவறிவிட்டு, தற்போது மண்டல தலைவர்களை ராஜினாமா செய்ய வைத்து முறைகேட்டை மறைக்கப் பார்க்கிறது. சொத்து வரியை உயர்த்தி மக்களை வதைத்தது போதாதென்று முறைகேடுகளால் மக்கள் வரிப்பணத்தையும் தி.மு.க. சூறையாடுகிறது" என்று தெரிவித்தார்.மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி ராம.சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்