காற்றழுத்த தாழ்வு பகுதி 21-ந்தேதி உருவாகும் - வானிலை மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும் போது,தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இந்நிலையில், தென் மண்டல வானிலை மைய தலைவர் அமுதா செய்தியாளர்களின் சந்திப்பில் இன்று கூறும்போது, தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 21-ந்தேதி, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.
இதனால், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீச கூடும். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 21-ந்தேதி காலைக்குள் கரை திரும்ப வேண்டும் என கூறியுள்ளார். 24-ந்தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்ய கூடும். இடி, மின்னலின்போது மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். தொடர்ந்து அவர், தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
18 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 1-ந்தேதி முதல் தற்போது வரை 14 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இயல்பை விட இது 58 சதவீதம் அதிகம் ஆகும். நெல்லை மாவட்டத்தில் 254 சதவீதம் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட அதிகம்.
23 முதல் 25 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. 19 மற்றும் 24 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.
கருத்துக்கள்