தொடர் கனமழை : ஆட்சியர்களுக்கு முதல்அமைச்சர் முக்கிய உத்தரவு
மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கண்ட மாவட்டங்களில் சராசரியாக 56.61 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திட வேண்டும் என்றும், மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திட வேண்டும் என்றும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், 19.10.2025 அன்று ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக தளர்வு வழங்குமாறு தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு முன்மொழிவு அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டி, இது குறித்து மத்திய அரசின் ஒப்புதல் பெற அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
கருத்துக்கள்