advertisement

விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி

அக். 22, 2025 9:35 முற்பகல் |

விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தஞ்சாவூர், திருவாரூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். அதன்பிறகு, செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் செய்துள்ளனர். தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் மதியம் வரை பல இடங்களில் விவசாயிகளை சந்தித்தேன். விவசாயிகள் படும் துன்பங்களை பார்த்தேன். தஞ்சாவூர் காட்டூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட நெல் முளைத்து பாதிப்படைந்துள்ளது. உடனடியாக நெல் கொள்முதல் செய்யாததே இதற்கு காரணம். 5 ஆயிரம் மூட்டைகள் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் மூட்டைகள் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொள்முதல் செய்யப்படவில்லை.

மொத்தம் 5 இடங்களுக்கு சென்று நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டோம். ஒரு நாளைக்கு 900 மூட்டைகளே எடை போட்டு கொள்முதல் செய்யப்படுகின்றன. அதுவும் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யப்படவே இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால், கொள்முதல் செய்த நெல்லை லாரிகள் மூலம் அனுப்பினால்தான் புதிதாக கொள்முதல் செய்ய முடியும் என்று கூறுகின்றனர். 

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உடனடியாக திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.அ.தி.மு.க. ஆட்சியில் தினமும் ஆயிரம் மூட்டைகள் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் எடை போட்டோம். இன்று நாள் ஒன்றுக்கு 900 மூட்டைகள்தான். ஆனால், அமைச்சர் சட்டசபையில் 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாக கூறினார். எதற்கு இந்த அரசாங்கம் இருக்கிறது. நேரடியாக விவசாயிகள் கொண்டு வந்த நெல்லைக்கூட கொள்முதல் செய்ய முடியவில்லை. விவசாயிகள் நகையை அடமானம் வைத்து பயிரிட்டு நெல்லை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், திறந்த வெளியில் முளைத்துப் போய் கிடக்கின்றன. விவசாயிகள் கண்ணீர்விட்டு அழுகிறார்கள் என்றார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement