2026 தேர்தல் அனைத்து கட்சிகளுக்கும் பெரும் யுத்தம்! கவிஞர் சினேகன்
வரும் சட்ட மன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டி வரும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளரும், திரைப்பட பாடலாசிரியருமான சினேகன் தெரிவித்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சினேகன், தனது மனைவி கனிகா ரவி மற்றும் இரண்டு மகள்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று குடும்பத்துடன் தரிசனம் செய்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கந்தசஷ்டி விழாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக என் மகள்களுடன் கோயிலுக்கு வருவது திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தான்.
கோயிலில் அனைவருடனும் சேர்ந்து தரிசனம் செய்தது ஆத்ம திருப்தியாக உள்ளது. அனைவரும் இணக்கமாக இருந்து அனைத்து வேறுபாடுகளையும் கடந்து செல்வதுதான் மானுட பண்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சிறிய சிறிய விஷயங்களை கடந்து செல்ல கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக, 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, "அது பற்றி உங்களுக்கும் எனக்கும் இப்போதே தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். மற்ற தேர்தல்களை விட, 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே போல, இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டி வரும்" என சினேகன் தெரிவித்தார்.
கருத்துக்கள்