பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை திருட்டு
சென்னை திருவான்மியூரில் வீட்டில் பரிகாரம் செய்வதாக கூறி, பணம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் மேட்டு தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மஞ்சு (40). கடந்த 10ஆம் தேதி இவரது வீட்டிற்கு குடுகுடுப்பையுடன் சாமியார் போல நபர் ஒருவர், மஞ்சுவிடம் ‘உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர். இதனால் உங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய கெட்ட விஷயம் நடக்கப் போகிறது. இதனை தடுக்க உடனே பரிகார பூஜை செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த மஞ்சு, அவரை வீட்டிற்கு வரவழைத்து பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது, அந்த நபர் மஞ்சுவிடம், உங்கள் வீட்டில் உள்ள பட்டுப் புடவைகள், பணம் மற்றும் தங்க நகைகளை பூஜையில் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதை நம்பி, மஞ்சு தான் அணிந்திருந்த தங்க வளையல்கள், ஒரு ஜோடி கம்மல் என 4 சவரன் மதிப்பிலான நகைகளையும், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தையும் பூஜையில் வைத்துள்ளார். இவற்றை வைத்து அந்த நபர் பூஜை செய்வது போல ஏதேதோ செய்துள்ளார். அப்போது திடீரென தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். இதையடுத்து, தண்ணீர் எடுப்பதற்காக மஞ்சு சமையல் அறைக்கு சென்றார்.
இந்த சமயத்தை பயன்படுத்திய அந்த நபர், பூஜையில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். தண்ணீர் கொண்டு வந்த மஞ்சு, பூஜை செய்த நபர் மற்றும் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.இதில், பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற நபர், சென்னை கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்து அவரது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.





கருத்துக்கள்