advertisement

டாக்டர்கள் போல் நடித்து நூதன திருட்டு: 2 பேர் கைது

மார். 14, 2026 4:24 முற்பகல் |

 

சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் போல் நடித்து நோயாளியுடன் இருந்த பெண்ணிடம் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் காஞ்சனா (30). இவரது மாமியாருக்கு தலையில் கட்டி வந்ததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து உடன் இருந்து கவனித்து வந்தார். அப்போது 6 ஆம் தேதி காஞ்சனா அவரது மாமியாரை அழைத்துக் கொண்டு மயக்கவியல் மருத்துவரை பார்க்க சென்று உள்ளார்.

அங்கிருந்த ஒருவர் தன்னை மருத்துவர் என அறிமுகம் செய்து கொண்டு, உங்களது மாமியாரின் சிகிச்சையை நான் தான் கவனித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன். எனவே அவரது மருத்துவ ஆவணங்களை காட்டுமாறு கேட்டு உள்ளார்.

இதையடுத்து காஞ்சனா மருத்துவ ஆவணங்களை அந்த நபரிடம் காண்பித்து உள்ளார். அதை வாங்கி பார்த்த அந்த நபர் நாளை வந்து மீண்டும் பார்ப்பதாக கூறி விட்டு சென்று உள்ளார். இதையடுத்து மறுநாள் காலை 7 மணி அளவில் வார்டுக்கு மருத்துவர் என கூறிக் கொண்ட அந்த நபர் காஞ்சனாவை மாத்திரைகள் வாங்க வேண்டும் என ஏழாவது தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஏழாவது தளத்திலிருந்த ஸ்கேன் மையம் அருகே அழைத்துச் சென்றவர், நீங்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? என்று தெரிந்து விடும் என காஞ்சனாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய காஞ்சனா ஸ்கேன் எடுப்பதற்கு ஒப்புக் கொண்டு உள்ளார். இதனால் அந்த நபர் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக தங்க நகைகள் செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு வெளியே வைக்கும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து காஞ்சனா தான் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க தாலி, இரண்டு கிராம் மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கொடுத்து உள்ளார். இதை அந்த நபர் தான் பத்திரமாக தனது அறையில் வைத்து விட்டு வருகிறேன். அதுவரை இங்கேயே அமர்ந்திருங்கள் என கூறி விட்டுச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் அந்த நபர் வராததால் பதற்றம் அடைந்த காஞ்சனா, அவரை தேடிச் சென்றுள்ளார். அப்போது அந்த நபர் மருத்துவர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காஞ்சனா தான் ஏமாற்றப்பட்டது அறிந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய குற்ற பிரிவில் புகாரை அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை வாங்கி தப்பி சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த நபர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்வி (35) மற்றும் அவருடன் இருந்த கூட்டாளி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் (30) என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement