அ.தி.மு.க வாயிலாக வரும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்-முதல்அமைச்சர் ஸ்டாலின்
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாட்சியே சாட்சி... துப்புக் கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி... கொடூரமான ஆட்சிக்கு கோடநாடு சம்பவமே சாட்சி... என அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார் .
நடைபெறவுள்ள 2026 பொதுத் தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் கே.கே. கதிரவன், முதுகுளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கமும், திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கரு .மாணிக்கம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்தும், இவர்களை வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி வாக்குகள் சேரிப்பதற்காக தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடந்த பிரம்மாண்டமான மின்னொளி மேடையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
நெஞ்சை அள்ளும் கடற்கரை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் . மாவட்டத்தில் ராமேஸ்வரம், குண்டு மிளகாய், பசுமை குளங்கள் உள்பட உலகமே போற்றும் அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் உள்பட பல்வேறு தலைவர்களை தந்த மண் . சாதி மதம் வேற்றுமைகளை கடந்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடியவர்கள் இந்த மாவட்டம்.
2026-ம் ஆண்டுக்கு முன்பு வரை ராமநாதபுரத்தை தண்ணீர் இல்லாத காடு என்று சொல்வார்கள். கலைஞர் ஆட்சியில் நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது கலைஞர் உத்தரவின்படி ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை 3 ஆண்டுகளில் செயல்படுத்திட முடியுமென அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் 2 ஆண்டுகளில் செய்து முடித்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகிறேன். ஸ்டாலின் அந்த பெருமையோடு வாக்கு கேட்டு வந்து இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை செயல்படுத்திய உரிமையோடு வாக்கு கேட்டு வந்து இருக்கிறேன்.
நமது ஆட்சி பொறுப்புக்கு வந்த போது இருந்த நிலைமைகளை பட்டியலிட்டு விவரித்து கூறினார்.
கடந்த தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் வெற்றி பெறச் செய்தது போன்று, தற்போதும் மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு 100 சதம் வெற்றியை கொடுக்க வேண்டும்.
1974-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் உப்புக்கழகம், மதகு அணை கட்டப்பட்டது எனவும், செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை விவரித்து கூறினார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளது .
சொன்னதை உறுதியாக செய்வேன். சொல்லாததையும் செய்வேன். வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது ... என்ற நிலையை மாற்றி தெற்கு வழிகாட்டுகிறது என்ற நிலையை உருவாக்கி உள்ளோம்.
அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் விடியல் பயணம் பேருந்துகள் அதிகரிக்கவும், கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் ரூ .2,000 ஆயிரமாக உயர்த்தியும், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வழங்கப்படவிருக்கும் நலத்திட்டங்களை பட்டியலிட்டு கூறியதோடு, மகளிர்களுக்கு இல்லத்தரசி திட்டம் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ .8,000 /= க்கு கூப்பன் மூலம் எந்தப் பொருள்களை வாங்கலாம் என இப்போதே மகளிர்கள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. தற்போதைய சூப்பர் ஸ்டார் நமது தேர்தல் அறிக்கையாகும்.
தொகுதி மறுவரையறை என்ற அறியாயத்தை எதிர்த்து கேள்வி கேட்க பழனிச்சாமிக்கு துணிவு இருக்கிறதா ? மோடி, அமித்ஷாவை எதிர்த்து பேச வேண்டுமென்றால் எடப்பாடி பழனிச்சாமி சைலண்ட் மோடுக்கு போய் விடுகிறார்.
அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை புள்ளி விபரங்களோடு எடப்பாடி பழனிச்சாமி என்றைக்காவது பேசியிருக்காரா ?
எடப்பாடி பழனிச்சாமி மறைந்த தலைவர்களை கொச்சைபடுத்தி பேசி வருகிறார் . பெண்களை கண்ணியமின்றி பேசுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் புகட்டும் நாள்தான் ஏப்ரல் 23 . கொள்கையற்ற துரோக கூட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும்.
உக்ரைன் போரை நிறுத்தினேன். அமெரிக்காவை அலற விட்டேன் என்று கூறிய மோடி இலங்கை கூட பேசச் சொன்னால் மவுனம் காக்கிறார். விஷ்வ குரு என கூறும் மோடி இலங்கையிடம் பேசச் சொன்னால் மவுனகுருவாக மாறி விடுகிறார் .
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் வரலாற்றில் நிற்கும் திட்டங்கள் அல்ல... வரலாற்றை படைக்கும் திட்டங்கள் ...
மேற்கு வங்காளத்தில் பாஜக விட்டுள்ள பொது சிவில் சட்டம் வாக்குறுதியை தமிழ்நாட்டில் பாஜகவினால் விட முடியுமா ? தமிழ்நாட்டை பாதுகாப்பது திராவிட பெருஞ்சுவர் .
தமிழ்நாட்டிற்கு வரிசை கட்டிக்கொண்டு வருகின்ற அமைச்சர்கள் முன்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக்குள் பாஜக நுழைய எடப்பாடி பழனிச்சாமி பல்லக்கு தூக்கியுள்ளார் . ஐபில் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது போன்று தமிழ்நாடு மக்களும் அ.தி.மு.க வாயிலாக வரும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாட்சியே சாட்சி ... துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி... கொடூரமான ஆட்சிக்கு கோடநாடு சம்பவமே சாட்சி... அதிமுகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கு விழும் வாக்குகள் ...
நல்லாட்சி தொடர்ந்திட ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ...
வெல்வோம் ஒன்றாக ... வெல்வோம் ஒன்றாக ... வெல்வோம் ஒன்றாக ... என பேசினார்.
முன்னதாக, மாவட்ட கழகச் செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர்கள் வ.சத்தியமூர்த்தி, அன்வர்ராஜா, ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி, முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே. வி.ஆர். ராம்பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், பரமக்குடி நகராட்சித் தலைவர் சேதுகருணாநிதி , நகர்மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, பேரூர் கழக, உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள் என தி.மு.க. உள்பட மதச்சார்பற்ற அனைத்து கட்சி கூட்டணி நிர்வாகிகள், சார்பு அமைப்பினர்கள் உள்பட பெண்கள், ஆண்கள், வாக்காளர்கள் வெள்ளம் போல் திரண்டு மக்கள் வெள்ளமாக காட்சியளித்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்