ஈரோடு விஜய் பிரசாரம்! த.வெ.க. நிர்வாகிகள் உறுதி மொழி பிரமாண பத்திரம் அளிப்பு
த.வெ.க. தலைவர் விஜய், “மக்கள் சந்திப்பு” என்ற பெயரில் மாவட்டம் தோறும் பொதுக்கூட்டங்களை நடத்தி, நேரடியாக பொதுமக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்துகிறார்.பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான மைதானமாகும். இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கான அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை பின்பற்றுவதாக உறுதி மொழி பிரமாண பத்திரத்தை த.வெ.க. நிர்வாகிகள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
விதிமுறை மீறல் ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டிய ஏற்பாட்டாளர்களின் பெயர்களும் அந்தப் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கட்டாயமாக மேற்கூரை அமைக்க வேண்டும், விஜய் வருகை மற்றும் புறப்பாடு நேரம், அவர் பயணிக்கும் பாதை ஆகிய விவரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.





கருத்துக்கள்