advertisement

அமமுக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும்: டி.டி.வி.தினகரன்

டிச. 16, 2025 8:47 முற்பகல் |

 

தஞ்சாவூர்: அமமுக இடம் பெறும் கூட்டணியே வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பிப்ரவரி 24 ஆம் தேதி யாருடன் அமமுக கூட்டணி வைக்கும் என்பதை உறுதியாக தெரிவிப்பேன். அமமுக இடம் பெறும் கூட்டணி தான், வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். இதை அதீத நம்பிக்கையில் கூறவில்லை. தற்போதைய தமிழக அரசியல் 4 முனை போட்டி நிலவுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் மீண்டும் வந்து இணையும் வாய்ப்புள்ளது என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது அவருடைய சொந்த கருத்து. நான் எனது கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பத்தை வைத்தே செயல்படுவேன். அமமுக நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் ஒன்றரை மாதத்தில் புரிந்து கொள்வீர்கள்" என்றார்.

 திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை மாற்ற வேண்டும் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. கடவுள், மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்கும் செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். சகோதரத்துவத்துடன் அண்ணன், தம்பி, தங்கை என ஒரே குடும்பமாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது" என்றார்.

ஒரே அணியில் இணைந்தால் தான் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த சட்டமன்றத் தேர்தலில் சரியான முடிவை மக்கள் தெரிவிப்பார்கள். நாங்கள் இடம் பெறும் கூட்டணியை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. அமமுக வெற்றிக் கூட்டணியில் இணையும். எங்கள் கூட்டணி குறித்து வரும் பிப்ரவரி மாதம் உறுதியாக தெரிவித்து விடுவோம்" என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement