குப்பையில்லா குமரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
நாகர்கோயில் மாநகராட்சியும், தவப்புதல்வி அமைப்பும் இணைந்து நடத்திய “குப்பையில்லா குமரி – நலமான நாகர்கோயில்” விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி இடலாக்குடி சதாவதானி செய்கு தம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் (பொ) என்.ஜி. ஸ்ரீதேவி* வரவேற்புரையாற்றினார். நாகர்கோயில் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.ஏ. பியாசா ஹஜிபாபு வாழ்த்துரையாற்றினார்.நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, நாகர்கோயில் மாநகராட்சியின் மேயர் (பொ) எம். மேரி பிரின்சி லதா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, தூய்மையான நகரத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், ஒவ்வொரு குடிமகனும் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குப்பையில்லா குமரி உறுதிமொழி” நிகழ்வை தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லதுரை நடத்தினார்.
அதில் மாணவர்கள்,“நான் எனது வீடு, பள்ளி மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பேன். குப்பைகளை உரிய இடத்தில் மட்டுமே கொட்டுவேன். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பேன். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதுணையாக இருப்பேன். தூய்மையான குமரி, நலமான நாகர்கோயிலை உருவாக்க என்னால் இயன்ற பங்களிப்பை வழங்குவேன்”, என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் “தூய்மையான சமுதாயத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பள்ளி மாணவர்களிடமிருந்தே தொடங்க வேண்டும். எனவே குப்பையில்லா குமரி என்ற இலக்கை அடையும் வகையில், மாவட்டத்தின் ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற உறுதிமொழி நிகழ்ச்சிகளும் விழிப்புணர்வு பேரணிகளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் மூலம் குடும்பங்களுக்கும், குடும்பங்கள் மூலம் சமூகத்திற்கும் தூய்மை குறித்த விழிப்புணர்வை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையற்ற மாவட்டமாக மாற்றும் மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும்” என்றும் தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுடன்,மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் எம். சரோஜா, முன்னாள் மாணவ சங்க தலைவர் ஹாஜி பாபு, சமூக ஆர்வலர் ஆனந்த் சிவகுரு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





கருத்துக்கள்