advertisement

உழைத்து வாங்கிய சொத்துகள் அபகரிப்பு, திருட்டு, பொய் வழக்கு: கன்னியாகுமரி எஸ்பி,யிடம் முதியவர் மனு

ஜூலை 22, 2026 8:07 முற்பகல் |

 


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் சலீம் என்பவர் 27 ஆண்டுகள் குவைத்தில் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் அபகரிக்கப்பட்டதாகவும், தனது வீட்டிலிருந்து நகை மற்றும் பணம் திருடப்பட்டதாகவும், தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் விரிவான மனு அளித்துள்ளார்.

மனுதாரரின் கூறுகையில், இளவயதிலேயே குவைத் நாட்டில் கொத்தனாரின் கையாளாக பணிபுரிந்து 27 ஆண்டுகள் சேமித்த வருமானத்தில் பூதப்பாண்டி அருகே வீடு மற்றும் நிலம் வாங்கியதுடன், கேரள மாநிலம் காட்டாக்கடை பகுதியில் தனது பெயர், மனைவி மற்றும் மகன் பெயரில் 10 சென்ட் நிலமும் வீடும் வாங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், திட்டுவிளை காயிதே மில்லத் நகரில் வாங்கிய 5 சென்ட் நிலம், வெளிநாட்டில் இருந்த சூழ்நிலை மற்றும் மனைவி மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.2006 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியபோது, அந்தச் சொத்தில் பாதி பங்கை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும், பின்னர் முதல் மனைவியின் மூலம் பிறந்த இரு மகள்களுக்கு உயில் மூலம் அந்தப் பகுதியை எழுதி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக உடல்நலக் குறைவு மற்றும் நீரிழிவு நோய் காரணமாக வேலை செய்ய முடியாத நிலையில் இருந்ததாகவும், இதனைத் தொடர்ந்து மீதமுள்ள சொத்துகளையும் கைப்பற்றும் நோக்கில் தனது இரண்டாவது மனைவி திட்டமிட்டு செயல்பட்டதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.கடந்த ஜூன் 14, 2026 அன்று, தன்னை மனைவி மற்றும் மகளை தாக்கியதாக கூறி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தாம் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் சிறையில் இருந்த காலத்தில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் கட்டில், மெத்தை, அலமாரி, சுமார் 25 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம், சமையல் உபகரணங்கள், ரேஷன் அட்டை, எரிவாயு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.மேலும், தனது மனைவி வேறு ஒருவருடன் இணைந்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக சந்தேகம் இருப்பதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதனையடுத்து, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், தனது பெயருக்குரிய 2.5 சென்ட் நிலம் மற்றும் கேரளாவில் உள்ள 10 சென்ட் நிலம் மற்றும் வீட்டை மீட்டுத் தர வேண்டும், வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நகை, பணம் மற்றும் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும், தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாக கூறினார்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement