திருப்பூரில் குவியும் ‘ஜனநாயகன்’ டி-ஷர்ட் ஆர்டர்கள்
திருப்பூரில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டி-ஷர்ட்டுகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்போதே அதற்கு ஆர்டர்கள் குவிய தொடங்கி விட்டன.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் (ஜூலை 23) உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.சட்டமன்றத் தேர்தல் களத்தில் விஜய் இருந்த சமயத்தில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று இத்திரைப்படம் வெளியாவதாக இருந்தது.ஆனால், தணிக்கை தொடர்பான பிரச்சினையில் சிக்கியதை அடுத்து, இந்த படம் ரீலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கு பின்னணயில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக கருதப்படுவதால், ரசிகர்கள் திரைப்பட வெளியீட்டை ஒரு திருவிழாவை போல கொண்டாட பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வகையில், திருப்பூரில் ‘ஜனநாயகன்’ சிறப்பு டி-ஷர்ட்டுகள் தயாராகி வருகின்றன.இந்தியாவின் முக்கிய பின்னலாடை உற்பத்தி மையமாக விளங்கும் திருப்பூரில் உள்ள பல்வேறு பனியன் நிறுவனங்களுக்கு விஜய் ரசிகர் மன்றங்கள், திரையரங்குகள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான டி-ஷர்ட்களுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
வழக்கமாக, பெரிய நடிகர்களின் திரைப்பட வெளியீட்டின் போது ஒன்று அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய டி-ஷர்ட்களை தயாரித்து வந்த நிலையில், இந்த முறை ரசிகர்களின் அபார வரவேற்பு காரணமாக 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ‘ஜனநாயகன்’ டி-ஷர்ட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.ரசிகர் மன்றங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு திரையரங்குகளும் தங்களது வளாகங்களில் விற்பனை செய்வதற்காக மொத்தமாக டி-ஷர்ட்களை ஆர்டர் செய்துள்ளன.
அதேபோல், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ரசிகர்களிடமிருந்தும், ஆன்லைன் மூலமாக ஆர்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் கடந்த சில நாட்களாக திருப்பூரில் உள்ள பிரிண்டிங் மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.





கருத்துக்கள்