கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா.
கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியின் மாணவர் மன்ற தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு , எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் , முனைவர் பி.எல்.சிவக்குமார் மாணவர் மன்ற தலைவராக பி.காம். சி.ஏ. துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஆர்.சங்கீதா, துணைத் தலைவராக பி.எஸ்சி கணினி அறிவியல் சைபர்செக்யூரிட்டி துறை மூன்றாம் ஆண்டு மாணவி யூ.ஹேமாஸ்ரீ, செயலாளராக பி.எஸ்சி ஐடி துறை இரண்டாம் ஆண்டு மாணவி கே.காவியா, துணைச் செயலாளராக பிசிஏ துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ருத்ர சர்மா ஆகியோருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதே போல் கல்லூரியில் செயல்படும் 39 கிளப்புகளின் மாணவத் தலைவர்கள், செயலாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கல்லூரி முன்னாள் மாணவரும், தற்போதைய ரோட்டரி கோவை மாவட்ட ஆளுநருமான ரோட்டேரியன் ஆர்.எஸ்.மாருதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது : நான் இந்த கல்லூரியில் படிக்கும் போது பெரிய அளவில் வெளி உலகம் தெரியாது. வேலை வாய்ப்புகள் குறைவு. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை. ஆனால், தற்போது நான் இந்த கல்லூரியைப் பார்க்கும்போது அபரிவிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. இங்கு கல்விச்சூழல் பலமடங்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. உங்களுடைய திறனுக்கேற்ற 39 கிளப்புகள் இந்த கல்லூரியில் செயல்படுகிறது. நீங்கள் மிகச் சரியாக பயன்படுத்தி உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி இன்னும் நாம் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். தலைமைத்துவத்தில் எண்ணற்ற சவால்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு சவாலையும் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்பாக அணுகி முன்னேற வேண்டும். நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதை முழுமையாக செய்பவராக இருக்க வேண்டும். நம் கல்விக்கேற்ற பணியைத் தேர்வு செய்து அதில் வெற்றி பெற வேண்டும். நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை, கிடைக்கும் வாய்ப்புகளைக் கைவசமாக்கி மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பி இல்லாமல் தன் கையே தனக்கு உதவி என்ற நோக்கில் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும். நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கல்லூரி உங்கள் வாழ்க்கையின் பெரிய இலக்கைத் தொட முழுமையாக ஆதரவு தரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக , பி.காம். சி.ஏ. துறைத்தலைவர் ஆர்.கீதா அனைவரையும் வரவேற்றார். தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் என்.சுமதி நன்றி கூறினார்.
விழாவில் மாணவர், மாணவியர்கள், பேராசிரிய பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.





கருத்துக்கள்