advertisement

உதகை - இன்று முதல் இரவு நேர போக்குவரத்துக்கு கட்டுபாடுகள்

அக். 24, 2026 8:21 முற்பகல் |

 

உதகை பர்லியார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குன்னூரிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மண் சரிந்து விழுந்தது. அப்போது பேருந்தில் ஓட்டுநரும் நடத்துநரும் மட்டும் இருந்தனர். நடத்துநர் காயங்களுடன் மீட்கப்பட்டு முதலில் மேட்டுப்பாளையம் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநர் ஜனகராஜ் என்பதும், அவர் நீலகிரி மாவட்டம் பாலடா பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடத்துநர் கேசவன் விபத்து குறித்து கூறுகையில், “குன்னூரிலிருந்து பேருந்து கோவை நோக்கி இன்று காலை வழக்கம் போல் புறப்பட்டது. பேருந்தில் 7 பேர் பயணித்தனர். செல்லும் வழியில் மரம் விழுந்ததால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இறக்கி விடப்பட்டனர்.
அதன் பிறகு பேருந்து மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், அந்த பாதையில் சென்றோம். அங்கும் ஒரு மரம் விழுந்து கிடந்தது. அங்கு வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்தினோம். அங்கும் மண்சரிவு ஏற்பட்டு பேருந்தின் மீது விழுந்தது” என்று கூறினார்.

பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் ஆங்காங்கே சிக்கியுள்ள வாகனங்களை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு உதகை - மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலைகளில் இரு மார்க்கமாக வாகனங்கள் செல்ல இரவு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றொரு இடத்தில் நடந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் அங்கு விரைந்து சென்று மண் சரிவில் சிக்கியிருந்த மாணவர்களை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து வரும் 26 ஆம் தேதி வரை 2 நாட்களுக்கு உதகைக்கு சுற்றுலாவிற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பர்லியார் அருகே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தற்போது குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுபாதையாக கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் பொதுமக்கள் பயணிக்கலாம் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர் சாலையில் ஏறப்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement