தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் பொறுப்பு- வைகோ
மதுரை: எஸ்ஐஆர் மூலமாக தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழு பொறுப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரைக்கு வருகை தந்த வைகோ அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறது. முந்தைய ஆட்சிகளில் எளிதாக அரசியல் அதிகார மையங்களை அணுகிய ஸ்டெர்லைட் நிறுவனத்தினரால், தற்போது விஜய்யை அணுக முடியவில்லை. இதுவே தற்போதைய ஆட்சியின் நேர்மைக்கு சான்று.
எஸ்ஐஆர் மூலமாக நாடு முழுவதும் சுமார் 13.30 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இத்தனை பேர் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். எஸ்ஐஆர் திருத்தப் பணிகளின்போது, வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களை நீக்கும் பணிகளில் திமுகவினர் ஈடுபட்டனர்.
கொளத்தூரில் அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் வார்டு வாரியாகவும், வாக்குச்சாவடி வாரியாகவும் இந்த பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், இப்போது எஸ்ஐஆர் காரணமாகவே தாங்கள் தோற்றுவிட்டதாக திமுகவினர் கூறி வருகின்றனர். இதில் உண்மை கிடையாது. ஒருவேளை எஸ்ஐஆர் நடவடிக்கை இல்லாமல் இருந்திருந்தால் தவெக மேலும் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். தற்போது தவெக அரசை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என திமுகவில் ஒருதரப்பினர் நினைக்கின்றனர்.
தவெக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். அதேநேரத்தில், அரசு தவறான முடிவுகளை எடுத்தால் அதை சுட்டிக்காட்ட தயங்க மாட்டேன். கொள்கை அடிப்படையில்தான் நாங்கள் கூட்டணிகளை அமைத்திருக்கிறோம்" என வைகோ கூறினார்.





கருத்துக்கள்