திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா முன்னேற்பாடுகள் -தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் 2026-ஆம் ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா வரும் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் முன்னிலை வகித்தார்.
திருச்செந்தூர் நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான ஆத்தூர் தாமிரபரணி நீரேற்று நிலையத்தில் தடையில்லா மின்சாரம் பெற ஆத்தூர் மற்றும் மூலக்கரைப்பட்டி துணை மின் நிலையங்களிலிருந்து இரட்டை மின் இணைப்புகள் (Two sided Feeder connection) பெறத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருக்கோவில் பயன்பாட்டிற்குத் தேவையான தண்ணீரை, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளத் திருக்கோவில் இணை ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டது.தேரோடும் வீதிகளில் நிலத்தடி கேபிள்களை (Underground EB Cables) அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளத் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த சாலைகளைச் சரிசெய்து விரைவாகச் சாலைகள் அமைக்கவும், அப்பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் நகராட்சி, மாநில நெடுஞ்சாலைத் துறை, CKCIP மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருச்செந்தூர் நகராட்சியில் வீடுகளாகப் பதிவு செய்யப்பட்டு அனுமதியின்றி தங்கும் விடுதிகளாகச் செயல்படும் இடங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கவும், பாதாள சாக்கடைக் கழிவுநீர் வெளியேறும் பிரச்சனைக்குத் தீர்வுகாணவும் நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டது.கந்தசஷ்டித் திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் திருக்கோவில் இணை ஆணையர் அருணாச்சலம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், திருச்செந்தூர் வட்டாட்சியர் தங்கசாமி மற்றும் அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.





கருத்துக்கள்