தேனி, திண்டுக்கல், மதுரைக்கு ரெட் அலர்ட்; 14 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு நாளை (அக்.25) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.
மேலும் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, நாளை (அக்.25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26-ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் மாறக்கூடும். இது மேலும் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப்பகுதிக்கு அருகில் 28-ம் தேதி காலை நகரக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்.24) நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, மதுரை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.





கருத்துக்கள்