நெல்லை : மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்!எம்ப்ளாயீஸ் யூனியன் கோரிக்கை...
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, TNEB டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்தில் நீண்டகாலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கு உரிய பணப்பயன்களை வழங்க வேண்டும். CPS திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சட்டப்படி பணப்பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. கேங்மேன் பணியாளர்களுக்கு மின்சாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை வழங்குவதுடன், அவர்களை கள உதவியாளர்களாகப் பணிநியமனம் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
சொந்த மாவட்டம் மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு பணியிட மாற்றம் வழங்க வேண்டும். நீண்டகாலமாகப் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள சுமார் 70,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், டாக்டர் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிற்சங்கத்திற்கான இட ஒதுக்கீடு மற்றும் ஊழியர்களுக்கான உரிமைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிய ஒப்பந்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மின்வாரிய ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்து, காலிப்பணியிடங்களை நிரப்புவதன் மூலம் மின்வாரியப் பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழிற்சங்கத்தின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.





கருத்துக்கள்