அதிகரிக்கும் செலிபிரிட்டி விவாகரத்துகள் - பிரேமலதா அறிவுரை!
செலிபிரிட்டி விவாகரத்து குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர், “சினிமா பிரபலங்கள் பலரும் பல வருடம் வாழ்ந்துவிட்டு விவகாரத்து செய்கின்றனர். இது, ஏன் என்று தெரியவில்லை. நான் இன்றைய தலைமுறையினருக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கணவன் - மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும், ஈகோ இருக்கக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை.
நீ இப்படி இருந்தால் நான் அப்படி இருப்பேன் என்று இருந்தால், எப்படி குடும்பம் நடத்த முடியும்? அதற்கான உதாரணங்களைத்தான் இன்று நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் பெருமையாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்கிறேன். கேப்டன்தான் எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன். எனக்கென்று எந்த சுயவிருப்பமும் இல்லை.அவர் விருப்பம்தான் என் விருப்பம். அவர் செயல்தான் என் செயல். அவர் சொல்தான் என் சொல். திருமணமானபோதே என்னை நான் மாற்றிக்கொண்டேன். திருமணமானது முதல் அவர் வீட்டில் இருக்கும்போது நான்தான் சாப்பாடு ஊட்டிவிடுவேன். அதனால் கணவன் - மனைவிக்குள் புரிதல் இருந்தால் இந்த விவாகரத்து எல்லாம் தூசிமாதிரி. எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் அந்த திறமை இருவருக்குமே வந்துவிடும். இளைஞர்கள், பெண்கள் அனைவரும் இதனை என்னுடைய அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கருத்துக்கள்