நாமக்கல்லில் குடிபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
நாமக்கல் அருகே குடிபோதையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவரை, பயணிகள் பிடித்து, நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக துறையூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. வழக்கம் போல், நேற்று காலை 9 மணிக்கு, ஈரோட்டில் இருந்து பஸ் புறப்பட்டது. பஸ்சை, நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டியை சேர்ந்த நவீன்ராஜ் (28) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார்.
பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் உட்கார்ந்து வந்தனர். போதையில் இருந்த டிரைவர் நவீன்ராஜ், பஸ்சை கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். அதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கன்டக்டர் கண்டித்தும், டிரைவர் கண்டு கொள்ளவில்லை. பயணிகளும், உயிரை கையில் பிடித்தபடியே பஸ்சில் பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் அருகே எர்ணாபுரம் வந்தபோது, டிரைவரை தாக்க பயணிகள் முயன்றனர். அப்போது, சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது பஸ் மோதி நின்றது.
இது குறித்து நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், டிரைவரை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், பயணிகளை மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழக நாமக்கல் டெப்போ கோட்ட மேலாளர் செங்கோட்டுவேல் விசாரணை செய்து வருகிறார். டிரைவர் நவீன்ராஜ், பணியில் சேர்ந்து, ஒன்னறை ஆண்டுகளே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்