advertisement

தவெக.,வில் இணையும் அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ் ?

மே 24, 2025 4:09 முற்பகல் |

 

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியில் அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ் இணையவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தவெக.வில் புதிய வரவாக அருண்ராஜ் ஐ.ஆர்.எஸ் அவர்களின் பெயர் அடிபட்டுள்ளது. இவர் பல மாதங்களாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கி வந்துள்ளார். அதேசமயம் ஐ.ஆர்.எஸ் எனப்படும் இந்திய வருவாய்த்துறையில் உயர் அதிகாரியாக இருந்ததால் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. கட்சி சார் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பின்னர் விஜய் உடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவு எடுத்துள்ளார்.

கடைசியாக பாட்னாவில் வருவாய்த் துறையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு பணியை துறந்துவிட்டார். இனிமேல் நேரடி அரசியலில் இறங்க தடைகள் ஏதும் இல்லை. விரைவில் விஜய் கட்சியில் இணையும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும். தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் அடிப்படையில் மருத்துவர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். பின்னர் தமிழக வருமான வரித்துறை இணை ஆணையராக பதவி வகித்து வந்தார். 2021ல் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக பதவி வகித்தது கவனிக்கத்தக்கது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement