திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதியில் நேற்று 74,374 பேர் தரிசனம் செய்தனர். 37,477 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.3.02 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால் வைகுண்டம் பக்தர்கள் காத்திருப்பு அறைகள் தங்கும் அறைகள், முழுமையாக பக்தர்களால் நிரம்பி வழிந்தன.
கிருஷ்ண தேஜா வட்டத்திலிருந்து சீலாதோரணம் வட்டம் வரை 5 கிலோமீட்டர் வரை நின்று பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், அறை ஒதுக்கீட்டு அலுவலகங்கள், பஸ் நிலையம், அன்னபிரசாத மண்டபம், அகிலாண்டம், லட்டு வளாகம், ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அறைகள் கிடைக்காத பக்தர்கள் அலுவலகங்கள், விடுதி வளாகங்கள், மரத்தடிகள் மற்றும் நடைபாதைகளில் ஓய்வெடுக்கின்றனர்.இன்றும், நாளையும் இதே போல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்