மாணவிக்கு ரூ.3 இலட்சம் இழப்பீடு - தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவிக்கு சட்டப் பல்கலைக் கழகம் ரூ.3 இலட்சம் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்த பூஜா என்பவர் சென்னையிலுள்ள ஒரு சட்டப் பல்கலைக் கழகத்தில் முதலாண்டு பயில சேர்ந்துள்ளார். இதற்கிடையில் அவருக்கு அரசின் ஸ்கூல் ஆப் எக்ஸ்செலன்ஸ் சட்டக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சேர்ந்துள்ளார். 70 நாட்கள் மட்டுமே சென்னையிலுள்ள சட்டப் பல்கலைக் கழகத்தில் படித்ததால் தான் ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்து விட்டது. இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் செலுத்தப்பட்ட கல்விக் கட்டணத் தொகை ரூபாய் 2,65,000 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 25,000;, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.3,00,000 ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்