மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதேபோல மற்ற மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மத்திய, மாநில அரசுகள் டீம் இந்தியாவைப் போல இணைந்து செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடைந்து இருக்கும்போது, மாநிலங்களும் வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். இதுவே 140 மக்களின் விருப்பமாக இருக்கும். நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். உலகத் தரத்திற்கு இணையாக, ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு சுற்றுலாத் தலத்தையாவது உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அதில், “கடந்த 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 சதவிகிதமாக உயர்த்தினார்கள். ஆனால், 33.16 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 சதவிகிதமாக உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்” என்று வலியுறுத்தினார்.
கருத்துக்கள்