நெல்லையில் பள்ளி மாணவர்களிடையே மோதல்: காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மோதலில் 5 சிறுவர்கள் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சேரன்மகாதேவி பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வரும் இரண்டு மாணவர்களுக்கு இடையில் பள்ளியில் நண்பர்களுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தகராறை தொடர்ந்து, ஒரு தரப்பு மாணவர் நண்பர்களுடன் சென்று, எதிர் தரப்பு மாணவருடன் வாய் தகராறில் ஈடுபட்டு, அதன் தொடர்ச்சியாக, அந்த மாணவரை தாக்கி கையில் காயம் ஏற்படுத்தியுள்ளார். சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், சேரன்மகாதேவி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டு, காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்கொண்ட புலன் விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 5 சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் ஐந்து சிறுவர்கள் உடனடியாக கையகப்படுத்தப்பட்டு, சிறுவர் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது, பள்ளி பயிலும் மாணவர்களுக்கிடையே நண்பர்களுடன் பேசுவது தொடர்பாக ஏற்பட்ட வாய் தகராறின் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்வாகும். இச்சம்பவத்தினை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட இரு சமூகத்தைச் சார்ந்த நபர்களுக்கிடையே நடைபெற்ற தாக்குதல் என்று தவறாக சித்தரித்து தகவல்கள் பரப்பப்பட்டு வரப்படுகின்றன. ஆனால் மேற்சொன்ன தாக்குதல் சம்பவத்தில் பல சமூகத்தைச் சார்ந்த நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ரீதியான முன் விரோதத்தில் இச்சம்பவம் நடைபெறவில்லை பள்ளியில் மாணவர்கள் இடையே நடைபெற்ற தகராறில், மாணவர்கள் முதிர்ச்சியின்மை காரணமாக, உணர்ச்சி வசப்பட்டு இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இந்த சம்பவம் தொடர்பாக, உண்மை நிலவரம் பற்றி ஏதும் அறியாமல், உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் அத்தகைய செயலானது சட்டத்திற்கு விரோதமானதும், பொது மக்களின் அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் தீய செயலாகும்.
சமூக வலைதளங்களில் குழப்பத்தினை உருவாக்கும் வகையில் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த வருடத்தில் மட்டும், சமூக வலைதளங்களில், வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்கள் பதிவு செய்த குற்றத்திற்காக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு இடையிலான அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ காவல் துறை உறுதிபட நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாணவர்களும் தங்களது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான சிறப்பான கல்வியை பயின்று வாழ்க்கையில் முன்னேற தங்களது சிந்தனையையும், கவனத்தினையும் செலுத்துமாறும், தேவையற்ற வன்முறை பிரச்சினைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அவர்களது வளமான எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்