திருப்பூர் அருகே சிறப்பு எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு
திருப்பூரில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. தென்னை மரங்கள் அதிகமுள்ள இந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் மூர்த்தி என்பவரின் குடும்பம் அங்கேயே தங்கியிருந்துள்ளது.
இந்நிலையில் தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை , மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பக்கத்துத் தோட்டத்தில் இருந்தவர்கள், 100 க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் அங்கு வந்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த தந்தை, மகன்கள் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் திரு. அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்