உடுமலையில் விசாரணை கைதி தற்கொலை: 2 பேர் பணியிடை நீக்கம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக-கேரள எல்லையில், உடுமலை-மூணாறு மலைப்பாதையில் சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநில அரசு பஸ் மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தது. சோதனை சாவடியில் அந்த பஸ்சை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா தளி அருகே திருமூர்த்தி நகர் மேல்குருமலை பகுதி பழங்குடியினத்தை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து (வயது 45) என்பவரிடம் சிறுத்தை பல் ஒன்று இருந்ததும், தற்போது மாரிமுத்து, கேரள மாநிலம் மறையூர் பெரியகுடி பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாரிமுத்துவை அதிகாரிகள் தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். உடுமலை வனச் சரக அலுவலகத்துக்கு மாரிமுத்துவை அழைத்துச்சென்று அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணி அளவில் மாரிமுத்து வனத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்குள்ள கொக்கியில் தனது கைலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாரிமுத்து சாவில் மர்மம் உள்ளது என்றும், அவரை அடித்துகொலை செய்து தூக்கில் தொங்க விட்டனர் என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை முடிந்து பிணவறையில் இருந்து மாரிமுத்துவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றினார்கள். அப்போது மாரிமுத்துவின் உறவினர்கள், குடும்பத்தினர், கட்சியினர் அனைவரும் உடலை வாங்க மறுத்து, பிணவறை முன் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். மாரிமுத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனே வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உடுமலை ஆர்.டி.ஓ. குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் ஜான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு பிரேத பரிசோதனை அறிக்கையை அதிகாரிகள் வழங்கினார்கள். இருப்பினும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உடலை வாங்க மறுத்தனர். அவர்களது கோரிக்கையை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து மாரிமுத்துவின் உடலை இரவு 7.45 மணி அளவில் உறவினர்கள் வாங்கி சென்று அடக்கம் செய்தனர்.
கருத்துக்கள்