advertisement

அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்மாதிரியாக திகழும் - எடப்பாடி பழனிசாமி உறுதி

ஆக. 01, 2025 5:13 முற்பகல் |

 

2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தருவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

’புரட்சி தமிழரின் எழுச்சி பயணம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் நேற்று (ஜூலை 31) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “இரவு, பகல் பாராமல் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைக்கும் விவசாயிகளை கண்கள் போல் பாதுகாக்கும் கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை விலை இல்லாமல் கொடுத்தோம். எங்கள் ஆட்சியில் ஏரி, குளம், குட்டை மட்டுமல்ல கால்வாய்களும் தூர்வாரப்பட்டது.

எந்த பகுதியில் வத்தல் அதிகமாக விளையும்? எந்த பகுதியில் மக்காச்சோளம் போன்ற பயிர்களும் அதிகமாக விளையும் என ஆராய்ந்து விவசாயிகளை தேவையை பூர்த்தி செய்தோம். அதனால், அதிமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து பயிர்களுக்கும் நல்ல விலை கிடைத்தது. அப்போது அமெரிக்கன் படைப் புழுக்கள் பயிர்களை தாக்கியது. அதற்கு இழப்பீடாக ரூ.186 கோடி கொடுத்தோம். அதுமட்டுமின்றி அடுத்த வருடமே ரூ.48 கோடி மதிப்பீட்டில் அமெரிக்கன் படைப் புழுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்தோம். இதன்மூலம் கரும்பு, மஞ்சள், வாழை, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் காக்கப்பட்டு, நல்ல முறையில் சாகுபடி செய்யப்பட்டன. மேலும் ஆடு, மாடுகள் விலையில்லா கோழிகள் கொடுத்தோம்.


மேலும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஏழை என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்குவோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு அற்புதமான கான்கிரீட் வீடு கட்டி தரப்படும். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு முன் உதாரணமாக இருக்கும்" என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement