தூத்துக்குடி இரட்டைக் கொலை சம்பவம்: மாவட்ட காவல்துறை விளக்கம்
தூத்துக்குடியில் நடந்த அண்ணன்-தம்பி கொலை தொடர்பாக மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் 28.07.2025 அன்று ஒருவர் காணாமல் போனதாக வந்த புகாரின்பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் அன்றைய தினமே காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்து சந்தேக அடிப்படையில் காவல்துறையினர் சில நபர்களை விசாரணை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மேற்படி காணாமல் போனவர்கள் என்பது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவ்வழக்கின் எதிரியான தூத்துக்குடி கோவில்பிள்ளை நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ரிதன் (25) என்பவரின் சகோதரர் தற்கொலை செய்து கொண்டதில் அவரது உறவினர்களான கொலையான இருவர்கள் தான் காரணம் என ரிதனுக்கும் கொலையானவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கிடையே உள்ள முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இறந்து போன நபர்கள் கஞ்சா தகவல்கள் குறித்து காவல்துறைக்கு எந்த விதமான தகவல்களும் தெரிவிக்கவில்லை.
எனவே மேற்படி செய்தி தொலைக்காட்சி, கஞ்சா போதை கும்பல் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தற்காக கஞ்சா கும்பல் கொலை செய்ததாக செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை முற்றிலும் மறுப்பு தெரிவிப்பதுடன், உறவினர்களுக்கு இடையே ஏற்கனவே உள்ள முன்விரோதம் காரணமாகவே கொலை சம்பவம் நடந்துள்ளது எனவும் மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெளிவுபடுத்தி விளக்கம் அளிக்கிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துக்கள்