advertisement

தீபாவளி பண்டிகை : அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

அக். 19, 2025 2:20 பிற்பகல் |

 தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில், சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்; தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. இந்த இனிய நன்னாளில் மக்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களது இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளைப் பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து அனைவரும் இணைந்து தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் ஆட்சி நடத்தி வருகிற பாஜக.விற்கு மக்கள் பாடம் புகட்டும் நிலை உருவாகி வருகிறது. தீமையை வதம் செய்த தீபாவளித் திருநாளில் வகுப்புவாத நச்சு சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் வகையில் தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.

பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம் போல் மற்ற மதத்தவர்களோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டு தீப ஒளித் திருநாள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளி கிடைக்க அழிக்கப்பட வேண்டிய தீமைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முதன்மையானது மக்களை சீரழிக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது மட்டும் தான்.

விலைவாசி உயர்வு, வரிக்கொடுமை, வேலைவாய்ப்பின்மை, சட்டம் & ஒழுங்கு சீர்குலைவு என அழிக்கப்பட வேண்டிய சக்திகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் அகற்றுவதற்கான தீர்வு உங்களின் கைவிரல் நுனியில் தான் உள்ளன. அதை ஒருமுறை செய்தால் தமிழ்நாட்டில் இருள் இன்றுடன் முடிவுக்கு வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement