கோவில்பட்டி தீப்பெட்டி ஆலை குடோனில் தீ விபத்து
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பல்லாக்கு சாலை பகுதியில் முத்துக்குமார் என்பவர் தீப்பெட்டி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று (அக்.20) தீபாவளி பண்டிகை என்பதால், அப்பகுதியில் இருந்த சிலர் சாலையில் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
பட்டாசு வெடிக்கும் போது அதிலிருந்து சிதறிய தீப்பொறி, அங்கே இருந்த தீப்பெட்டி ஆலையின் பின்புறம் உள்ள குடோனில் விழுந்துள்ளது. இதில், குடோனில் வைக்கப்பட்டிருந்த தீ குச்சிகள் தீப்பிடித்துள்ளது. தொடர்ந்து, குடோன் முழுவதும் தீ பரவியதால், அங்கிருந்து வானளவிற்கு கரும்புகை எழுந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ மளமளவென எரிந்ததால், குடோனுக்குள் செல்ல முடியாத நிலை நிலவியது. அதனால், குடோனின் மேல்பகுதி மற்றும் பின்புறம் பகுதிகளை உடைத்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று விடுமுறை என்பதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீப்பெட்டி ஆலை குடோன் அமைந்துள்ள இடம், குடியிருப்புகள் அமைந்துள்ள நெருக்கடியான பகுதி என்பதால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கருத்துக்கள்