திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று ஆரம்பம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா ஒரு வாரம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கின்றது. பின்னர் சுவாமி, அம்பாள்களுடன் தங்க ரதத்தில் கிரி வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சி 6-ம் நாள் சூரசம்ஹாரம் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் நடக்கிறது. 28-ந் தேதி இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கின்றது.
கருத்துக்கள்