உடைந்த குழாய்களால் குடிநீர் வீணாகும் அவலம் !
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியம்? – சிவஞானபுரம் மற்றும் சேர்வைக்காரன்மடம் தேரிசாலையில் உடைந்த CWSS-90 குழாய்களால் குடிநீர் வீணாகும் அவலம் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்குட்பட்ட சிவஞானபுரம் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் (TWAD) CWSS-90 கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது.
அதேபோன்று, சேர்வைக்காரன்மடம் தேரிசாலையிலும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு சுமார் இரண்டு மாதங்களாக நீடித்து வருவதாகவும், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த உடைப்பு காரணமாக சுமார் 90 குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், நீர் கசிவு காரணமாக குடிநீர் அழுத்தம் குறைந்து, மக்களுக்கு முறையான குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து சேர்வைக்காரன்மடம் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் திருமதி ஏஞ்சலின் ஜெனிட்டா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சக்கம்மாள்புரம் காமராஜர் நகர் பகுதிகளுக்கு செல்லும் CWSS-90 கூட்டுக் குடிநீர் குழாய்களையும் முழுமையாக ஆய்வு செய்து, உடைப்புகள் மற்றும் கசிவுகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்து, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஒருபுறம் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படும் நிலையில், மறுபுறம் அரசின் செலவில் வழங்கப்படும் குடிநீர் வீணாகி வருவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக தலையிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு வழங்கி, சிவஞானபுரம், சேர்வைக்காரன்மடம் தேரிசாலை மற்றும் சக்கம்மாள்புரம் காமராஜர் நகர் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகக் குழாய்களை முழுமையாக ஆய்வு செய்து, உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






கருத்துக்கள்