பீகாரில் சாலை விபத்து - திருமணத்திற்கு சென்ற 8 பேர் பலி
பீகாரில் இரவு நேர பயணத்தால் நிகழ்ந்த சாலை விபத்தில், திருமண கோஷ்டியினர் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் சமேலி தொகுதி அலுவலகம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.இதையறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியான 8 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கதிஹார் எஸ்.பி., வைபவ் சர்மா கூறியதாவது; உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள்.
இவர்கள் அனைவரும் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். பலியான அனைவரும் ஆண்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என அடையாளம் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது. வாகனம் ஓட்டும் டிரைவர் சற்றே கண் அசந்தாலும் விபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம்.இந்த சம்பவமும் அப்படித்தான் நேரிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
கருத்துக்கள்