advertisement

தங்கம் வாங்காதீர்கள் என்பதா சாதனை? – மோடியை  விமர்சித்த ராகுல் காந்தி

மே 12, 2026 5:02 முற்பகல் |


 
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தற்போதைய நிதிநிலை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

குறிப்பாக, மக்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி விடுத்துள்ள அறிவுரை, அரசின் பொருளாதாரத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது என்று அவர் சாடியுள்ளார்.

சர்வதேச பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், மக்கள் சில சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவுறுத்தியிருந்தார்.

அதில்,ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்,பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்,பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும்,சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார்.இந்த கருத்துகளுக்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, தனது எக்ஸ் தள பதிவில் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.“தங்கம் வாங்காதீர்கள், பெட்ரோல் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமர் கூறுவது ஒரு ஆலோசனை அல்ல. அது கடந்த 12 ஆண்டுகால ஆட்சியின் நிர்வாகத் தோல்விக்கான ஒப்புதல்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது. அரசாங்கம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பொருளாதாரச் சிக்கலுக்கும் தீர்வு காணாமல், அதன் சுமையை பொதுமக்கள் மீது தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement