சிறுமியை திருமணம் செய்த வாலிபர்...! - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (24), பள்ளி வயதிலிருந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளால் நம்பவைத்து அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஒரே வீட்டில் குடும்ப வாழ்க்கை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாக அந்தச் சிறுமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளின் போது சிறுமியின் வயது தொடர்பான விவரங்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவலர்களுக்கு தகவல் அளித்தது. தகவலின் பேரில் துணை ஆய்வாளர் மலர்விழி தலைமையில் தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த விசாரணையில், சிறுமியை விஜய் தனது வசப்படுத்தி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டதுடன், கடந்த சில மாதங்களாக குடும்ப வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்தும் காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.





கருத்துக்கள்