advertisement

செங்கல்பட்டு: கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட  சிறுமி

மார். 07, 2026 5:22 முற்பகல் |

 

செங்கல்பட்டு: காணாமல் போன 15 வயது சிறுமி கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் புள்ளுதாஸ் (வயது 41). இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே உள்ள பம்மல், ஆதாம் நகர் பகுதியில் மனைவி ரிங்குதேவி மற்றும் 15 வயது மகள் உள்ளிட்ட நான்கு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். புள்ளுதாஸ் அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ரிங்குதேவி அருகில் உள்ள லெதர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

மகள்   பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 03- ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது 15 வயது மகளை காணாது  அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் அலைந்து தேடியுள்ளனர். எங்கும் தேடி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள், மார்ச் 04- ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகள் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
 
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர். இதனிடையே அனகாபுத்தூர் காமராஜபுரத்தில் உள்ள செங்கழுநீர் கல் குட்டையில் சிறுமி ஒருவரது உடல் மிதப்பதாக பொதுமக்கள் தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் கல் குட்டையில் இறங்கி சிறுமியின் சடலத்தை மீட்டனர்.

இது குறித்து சங்கர் நகர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் விரைந்துச் சென்று பார்த்த போது காணாமல் போன சிறுமி  என்பது தெரிய வந்தது. பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement