சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவிட்டு பாதியில் நின்று விட்டார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு வந்தனர்.
அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா திடுமல் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவர் அந்த பகுதியில் ஜே.சி.பி. ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் 15 வயது சிறுமி அவரது பெற்றோரிடம் தனது தோழியை பார்த்து வருவதாக கூறிவிட்டு பல்லடம் பகுதியில் இருந்து பஸ் ஏறி பரமத்தி வேலூர் வந்தார். அங்கு வந்த சிறுமியை சக்திவேல் அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் சக்திவேல் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அந்த சிறுமி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
அப்போது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று தெரிவித்தனர். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் டாக்டர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் திடுமல் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதன் காரணமாக சம்பவம் நடந்த இடம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பதால் சிறுமியின் பெற்றோர் நல்லூர் போலீசில் புகார் செய்தனர்.
இதன் பேரில் காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சக்திவேலிடம் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.





கருத்துக்கள்