தூத்துக்குடி - 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் தலைமையில் அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026- நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்டத் தேர்தல் ஆணையம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வுப் நடைப்பயணம் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் தொடங்கியது.
பேரணி, பாளையங்கோட்டை சாலை, பாலவிநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கே. இளம்பகவத், வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி, வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாவட்ட வளர்ச்சி முகமை உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ் ராம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு "நமது வாக்கு, நமது உரிமை" என்ற முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.





கருத்துக்கள்