ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி பண மோசடி : இளைஞர் கைது
சென்னை: ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளை குறிவைத்து பல மாநிலங்களில் பண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பார்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளி பாண்டியன் (61). இவர் வேலை நிமித்தமாக சென்னை வந்து கடந்த 31-ம் தேதி சென்னை பல்கலைக்கழக வாளகத்தில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றார்.அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் பாண்டியனிடம் பணம் எடுக்க உதவி செய்வதாகக் கூறி ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை வாங்கி ஏடிஎம் இயந்திரத்தில் போட்டுவிட்டு, பணம் இல்லை என்று கூறி அவரை ஏமாற்றி, மறைத்து வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த நபர் பாண்டியனின் ஏடிஎம் கார்டை அருகில் உள்ள வேறு ஏடிஎம் மையத்தில் பயன்படுத்தி ரூ.23,500-ஐ எடுத்தபோது, பாண்டியனின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் முதியவரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிடாதாலா சுனில் (27) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.





கருத்துக்கள்