அஜித் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி சென்ற மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவரின் காரில் இருந்த 10 சவரன் நகை காணாமல் போனது தொடர்பாக, கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் உள்ளிட்ட சிலரை அழைத்து திருப்புவனம் காவல்துறையினர் விசாரித்தனர். இதில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இளைஞர் அஜித்தை விசாரிக்க அழைத்து சென்ற காவலர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே விசாரணையின் போது இளைஞர் அஜித்குமார் தப்பிக்க முயன்ற போது, கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்ட நிலையில், அவரை போலீசார் சுற்றிவளைத்து தாக்கிய இந்த வீடியோ வெளியாகி தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அஜித் குமாரை, போலீசார் சுற்றிவளைத்து தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த அறிக்கையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் என தெரிவித்திருந்ததை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்