advertisement

அஜித்குமார் மரணம் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி

ஜூலை 03, 2025 10:56 முற்பகல் |

 

சென்னை: திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்தில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணத்தினால் நேர்ந்த ரணம் ஆறும் முன்னே அவ்வழக்கில் தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஆகவே, சில நாட்கள் முன்பு நான் எழுப்பிய 9 கேள்விகளைத் தொடர்ந்து, மேலும் 3 கேள்விகளை தமிழக பா.ஜ., சார்பாக முன்வைக்கிறேன்.

1. அஜித் குமார் மீது புகாரளித்த நிகிதா மீது ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு அன்றையத் துணை முதல்வர் ஸ்டாலின் நேரடி உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கும் திமுக-வின் உயர் மட்டத் தலைமைக்கும் தொடர்புகள் இருந்ததால் தான் தனிப்படை அமைத்து அஜித் குமாரை அடித்தும், துன்புறுத்தியும் விசாரிக்க உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டதா?

2. அஜித்குமாரை காவலர்கள் துன்புறுத்துவதை நேரில் கண்டு காணொளியாக படம்பிடித்த முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். யார் இவரை அச்சுறுத்துகிறார்கள்?

3. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமலேயே தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அந்தத் தலைமைச் செயலக அதிகாரியைப் பற்றிய தகவல்கள் இன்னும் அரசு வெளியிடாதது ஏன்?

அஜித்குமாரின் கொலையில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கையில், வெறும் ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டும் இழப்பீடு வழங்கிவிட்டும் அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement