'நிகிதாவை விசாரிக்க வேண்டும்; -அஜித் தரப்பு வழக்கறிஞர் பேட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அஜித் கொலை வழக்கில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் புகார்தரரான நிகதா காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த வழக்கில் எவ்வித அச்சமும் இன்றி நீதிபதியிடம் சாட்சியம் அளிப்பவர்கள் சாட்சியம் அளிக்கலாம்.
நிகிதாவை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அது எங்களுடைய தார்மீக கோரிக்கை. நீதிமன்றம் இதை கன்சிடர் பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன். உயர்நீதிமன்றம் இப்பொழுது கொடுத்திருப்பது இடைக்கால உத்தரவுதான். இடைக்காலகட்டத்தில் போலீஸ் தரப்பால் சான்றாவணங்கள், சாட்சிகள் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அதை உறுதிப்படுத்தி சான்றாவணங்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்
கருத்துக்கள்