ஏழை மாணவர்கள் படிப்பது உங்களுக்கு கசக்கிறதா? - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
விழுப்புரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைசருமான 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள், மயிலம் சட்டமன்றத் தொகுதி நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"உங்களது எழுச்சியை பார்க்கும்போது அடுத்த ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் ஒரு குழு போடுவார்.
அதோடு அந்த திட்டத்தை கைவிட்டு விடுவார். இந்த அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக மாறிவிட்டது.முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ஏதாவது திட்டம் இந்த தொகுதிக்கு வந்ததா? அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை முடக்கியது தான் அவருடைய சாதனையாகும். ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். கொள்ளையடிப்பதற்கு மட்டுமே திட்டங்களை கொண்டு வருகிறார்கள். உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்தோம். அதை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். ஏன் இந்த ஏழை மாணவர்கள் படிக்கக்கூடாதா? அவர்கள் படிப்பது உங்களுக்கு கசக்கிறதா. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாகும்.இந்த மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக வருவதற்கு எங்களது அரசு துணை நிற்கும். 2026-ல் மாற்றம் வரும். மக்களுக்கு ஏற்றம் வரும்" என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து செஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
கருத்துக்கள்