advertisement

நடிகர்கள் ஸ்ரீகாந்த்,கிருஷ்ணாவுக்கு சம்மன்!

அக். 24, 2025 9:26 முற்பகல் |

 

பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில், சில மாதங்களுக்கு முன்பு இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்களிடம் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 11.5 கிராம் கொகைன் 10.3 கிராம் மெத்தப்பட்டமைன், 2.75 கிராம் MDMA, 2.4 கிராம் OG கஞ்சா மற்றும் 30 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, எங்கிருந்து அவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்தது? என்ற ரீதியில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அப்போது, போதைப்பொருளை வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த், ஜவஹர், பயாஸ் அகமது ஆகியோரை சென்னை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்ததால், அவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணிப்பர்வர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறையும் கடந்த ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. மேலும், ஹவாலா பரிவர்த்தனை மூலம் போதைப்பொருள் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே போல, நடிகர் கிருஷ்ணா அக்டோபர் 29 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட நாட்களில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ​சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் புழல் சிறையில் உள்ள பிரசாந்த், ஜவஹர், பிரதீப் குமார் ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement